மும்பை: ஹெலன் புயல் ஆந்திராவைத் தாக்கி ஓய்ந்த நிலையில் தற்போது அந்தமான் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு லெஹர் என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் புயல் அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பேரழிவை இப்புயல் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. இந்தப் புயலானது ஆந்திராவை நோக்கி நகர்வதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவுதான் இது ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு நிலையாக இருந்தது. இன்று காலையில் இது புயலாக மாறியது. இந்த சீசனில் வரும் 3வது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நிலவரப்படி அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு தெற்கு தென் கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் இது மையம் கொண்டிருந்தது. இது வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும், ஹட் பே, லாங் தீவுகளுக்கு இடையே இன்று இரவு கடக்கும்.
மறுபடியும் வங்கக் கடலின் தென் கிழக்கில் இது உயிர்த்தெழுந்து மேலும் தீவிரமடைந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்து வரும்.
இதை அந்தமானைத் தாக்குவதற்குள்ளாகவே புயல் என்று அறிவித்து விட்டதால், ஆந்திரக் கரையை இது தாக்கும்போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அதி தீவிரப் புயலாக இருக்கும் என்பதால் இப்போதே ஆந்திர மாநில கடலோரப் பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தப் புயலானது ஆந்திர கரையைத் தாக்குவதற்கு இன்னும் 4 முதல் 5 நாட்களாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு நிலப்பரப்புக்கு வெகு அருகில் வந்ததும்தான் ஒரு புயலுக்கு பெயர் வைப்பார்கள். ஆனால் மிக தொலைவில் உள்ள புயலுக்கு பெயர் வைத்து பெரும் புயல் என அறிவித்திருப்பதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment