Cine


சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:‘9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார்’ என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை. அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, ‘நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.

ஒரு விசாரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல், சதி திட்டம் அரங்கேறியதாகதான் இதில் அர்த்தம் கொள்ளப்படும். இதனால், பேரறி
வாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.

கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன. அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என்னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2வது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.
வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்துவதற்கு காரணம், இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்பதால்தான். ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

துரதிருஷ்டவசமாக ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.பேரறிவாளனின் குழந்தை பருவம் முதல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர் சிக்கியது வரையிலான குறும்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், தியாகராஜன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Nov 2013

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top