Cine

செஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. முதல்சுற்று ஆட்டம் 9ம் தேதி நடைபெறுகிறது. அண்ணா சாலையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
முதன் முதலாக இந்தியாவில்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியன் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் சொந்த ஊரான சென்னையில் நடைபெறுவதால், இந்த ஆண்டுப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்த் உடன் மேக்னஸ் கார்ல்ஸன்

43 வயதான விஸ்வநாதன் ஆனந்துடன், அவருடைய வயதில் பாதியே உடைய நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்ஸன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். லண்டனில் நடைபெற்ற கேண்டிடேட் போட்டியில் மேக்னஸ் கார்ல்ஸன் வெற்றி பெற்று, ஆனந்துடன் விளையாட தகுதி பெற்றார்.

திகப் போட்டிகளில் ஆனந்த் வெற்றி

ஆனந்தும், கார்ல்ஸனும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். இதில், 6ல் ஆனந்தும், 3ல் கார்ல்ஸனும் வெற்றி பெற்றுள்ளனர். 20 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

அனுபவ வீரரும், இளம் நாயகனும்

ஐந்து முறை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், செஸ் உலகில் அசைக்க முடியாத அனுபவ வீரராக உள்ளார். 1991ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச களத்தில் ஆனந்த் அறிமுகமாகும் போது, மேக்னஸ் கார்ல்ஸனுக்கு ஒரு வயது.தற்போது கார்ல்ஸனோ இளம் வயதிலேயே பல சர்வதேச பட்டங்களை வென்று நட்சத்திர நாயகனாக வலம் வருகிறார். நம்பர் ஒன் வீரரான கார்ல்ஸன், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மட்டும் இன்னும் வெல்லவில்லை.
தமிழக அரசு நடத்தும் உலகப் போட்டி

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை ஒரு மாநில அரசே ஏற்று நடத்துவது இதுதான் முதன் முறையாகும்.12 சுற்றுகளாக இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் முதலில் ஆறரைப் புள்ளி எடுக்கும் போட்டியாளருக்கு மகுடம் சூட்டப்படுகிறது. 12 சுற்றுகளின் முடிவில் இருவரும் சமபுள்ளிகள் எடுத்தால் டை பிரேக்கர் ஆட்டம் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறார்.
இளவயது வீரர்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மிகவும் இளவயதில் பங்கேற்கும் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்ஸன்.23 வயதே ஆன அவர், செஸ் உலகின் உச்சபட்ச போட்டியில் இந்தியன் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் களம் காண்கிறார்.

னந்தை வீழ்த்துவாரா கார்ல்ஸன்?

1991ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று, சர்வதேச களத்தில் கால் பதித்தார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். அப்போது மேக்னஸ் கார்ல்ஸனுக்கு ஒரு வயது. நார்வேயில் பிறந்த மேக்னஸ் கார்ல்ஸனுக்கு, அவரது தந்தை ஹென்ரிக் ஐந்து வயதில் செஸ் விளையாட கற்றுக் கொடுத்தார்.
5 வயதில் சதுரங்க ஆட்டம்

பின்னர் நார்வேயின் நம்பர் ஒன் வீரராக இருந்த கிராண்ட் மாஸ்டர் (SIMEN AGDESTIN)-னிடம் பயிற்சி பெற்ற மேக்னஸ் கார்ல்ஸன்.2004ம் ஆண்டு, 13வது வயதில் நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் முன்னணி வீரர்களைத் தோற்கடித்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கான முதல் நிபந்தனையைப் பூர்த்தி செய்தார். அப்போது ஊடகங்களால் பெரிதும் பேசப்பட்ட கார்ல்ஸனுக்கு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. அடுத்தடுத்து மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதமே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார் மேக்னஸ் கார்ல்ஸன்.
இளம் வயதில் அரிய சாதனைகள்

இதன் மூலம் உலகிலேயே மிகவும் இளவயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஏராளமான போட்டிகளில் அவர் வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 2801 தரப் புள்ளிகளைப் பெற்று, 2800 தரப்புள்ளிகளைத் தாண்டிய ஐந்தாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 19 வயதில் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற மகுடத்தைச் சூடி, மிகவும் இளவயதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தினார் கார்ல்ஸன். இந்த ஆண்டு தொடக்கத்தில் 2861 தரப் புள்ளிகளைப் பெற்று, உலகிலேயே அதிக தரப்புள்ளிகளைப் பெற்ற வீரர் என்ற பெருமைக்கும் உரியவரானார் கார்ல்ஸன்.

காத்திருக்கும் உலக சாம்பியன் பட்டம்?
இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்து நட்சத்திர நாயகனாக வலம் வரும் மேக்னஸ் கார்ல்ஸனின் கிரீடத்தில், உலக செஸ் சாம்பியன் என்ற வைரக் கல் மட்டும் இன்னும் பதியவில்லை.
ஆனந்தை வீழ்த்துவாரா கார்ல்ஸன்?

2004ம் ஆண்டு, 128 வீரர்கள் பங்கேற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற கார்ல்ஸன் தோல்வியைத் தழுவினார். தற்போது இருவர் மட்டுமே போட்டியிடும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கி, வெற்றி வாகை சூடும் நோக்கில் சென்னையில் கால் பதித்துள்ளார் கார்ல்ஸன்.

0 comments:

Post a Comment

 
Top