விழாக்கோலம் பூண்டது வான்கடே
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று களம் இறங்கிறது. இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இது என்பதால், அவரது சரித்திர சாதனையில் தாங்களும் பங்கு கொண்டதற்கு சாட்சியமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை பார்ப்பதற்காக வான்கடேயில் இன்று குவிய உள்ளனர்.கிரிக்கெட் உலகில் சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள, இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இன்று தன்னுடைய கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறார். இத்துடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
சச்சினுக்கு சிறு குழந்தைகள் முதல், வயதான தாத்தாக்கள் வரையில் பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. சினிமா நட்சத்திரங்கள், மிகப்பெரிய வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வி.வி.ஐ.பி.க்கள் இதில் உள்ளனர். அவரது ஒவ்வொரு ஆட்டத்தையும் இவர்கள் ரசித்து பார்த்துள்ளனர்.
1989ம் ஆண்டில் முதல் தர போட்டியில் களம் இறங்கிய சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளார். இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பிராட்மேனுக்கு நிகரான ஒரு ஜாம்பவானின் கடைசி ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் முதல் இதுபற்றி கேள்விப்பட்ட சாதாரண மக்கள் வரையில் ஆர்வமாக உள்ளனர்.
இதன் காரணமாக, வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. டிக்கெட்டுகளை விற்ற இணையதளமே முடங்கிப்போகும் அளவுக்கு ரசிகர்கள் அதில் குவிந்தது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெற வான்கடே மைதானத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் சச்சினை வாழ்த்தும் போஸ்டர்களையும், பேனர்களையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இப்பகுதியே சச்சின் என்ற தனிநபருக்காக விழாக்கோலம் பூண்டுள்ளது என்றால், அது மிகையாகாது.
இன்றைய போட்டியை காண்பதற்காக நண்பர்கள், உறவினர்களை அழைத்து வருவதற்காக சச்சினுக்கு மட்டும் பிரத்யேகமாக 200 டிக்கெட்டுகள் தரப்பட்டுள்ளன. சச்சினின் போட்டியை காண வரும் முக்கியமான விஐபி அவரது தாய் ரஜ்னி. அவரால் நடக்க முடியாது என்பதால், வீல்சேரில் அழைத்து வர சச்சின் ஏற்பாடு செய்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிராட்மேன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது, கடைசி போட்டியில் டக் அவுட் ஆனார். அதனால் அவரை வாழ்த்தக்கூட யாரும் அப்போது இல்லை. கலங்கிய கண்களுடன் அவர் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
ஆனால், இப்போது காட்சிகள் மாறிவிட்டது. சச்சினுக்கு பிரியாவிடை கொடுப்பதற்காகவே, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தன்னுடைய சொந்த மண்ணில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவர் 10 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும், இன்று தொடங்க உள்ள தன்னுடைய கடைசி போட்டியில் அவர் கவனத்துடன் விளையாடி சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுபோன்று, 2வது டெஸ்டிலும் மாபெரும் வெற்றியை பெற்று அதை சச்சினுக்கு அர்ப்பணிக்க இந்திய அணி வீரர்கள் தயாராகி உள்ளனர். கடந்த 2 நாட்களாக வலைப் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். இதில் சச்சினுடன், அவரது மகன் அர்ஜுனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியை பொருத்தவரையில் இன்றையப் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்கள்தான் இதிலும் விளையாட உள்ளனர். ஆனால், முதல் போட்டியில் தங்களை மோசமாக தோற்கடித்ததற்கு பழிக்குப்பழியாக 2வது டெஸ்டில் வெற்றி பெறும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜிவ் சுக்லா பேட்டி பாரத ரத்னா விருது ஓய்வுக்குப்பின் பரிசீலனை: சச்சின் டெண்டுல்கருக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அளிப்பது குறித்து அவரது ஓய்வுக்குப்பின்னர் பரிசீலிக்கப்படும் என்று நாடளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: விளையாட்டுத் துறையில் ஒருவருக்கு எம்.பி. பதவி அளிக்க வேண்டும் என்று வந்தபோது, கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்ட பலரது பெயர்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
ஆனால், இந்த பதவிக்கு சச்சின் டெண்டுல்கர்தான் மிக தகுதியானவர் என்று சோனியா காந்தி என்னிடம் கூறினார். இதுதொடர்பாக அவரிடம் பேசும்படியும் என்னிடம் கேட்டுக் கொண்டார். சச்சினிடம் சோனியா காந்தியின் விருப்பதை தெரிவித்து, அவருடைய ஒப்புதலை கோரினேன். அவர் தன்னுடைய குடும்பத்தினரிடம் பேசி சொல்வதாக கூறினார்.
அதன்பின்னர்தான் சச்சின் ஒப்புதல் அளித்தார். கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால், அவர் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அதை அளித்தால் சர்ச்சை ஏற்படும். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின்னர், அவருக்கு விருது அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்
0 comments:
Post a Comment