அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காமன்வெல்த் மாநாட்டிற்கு இலங்கை சென்றது ஏன்?? விளக்கம் தருகிறார் சல்மான் குர்ஷித்:
மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்றார். காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் அளித்தார்.
சல்மான் குர்ஷித் பங்கேற்பு
‘உள்நாட்டு போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த, போர்க்குற்றங்களை அரங்கேற்றிய இலங்கையில் நடைபெறுகிற காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாக புறக்கணிக்க வேண்டும்; அடுத்த 2 ஆண்டுகள் காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே தலைவராக தேர்வு செய்யப்படும் நிகழ்வுக்கு இந்தியாவும் துணை நிற்கக்கூடாது’ என்பதுதான் தமிழ்நாட்டின் ஏகோபித்த கோரிக்கை.
இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையிலும், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்குடன் தனி விமானத்தில் கொழும்பு சென்றார்.
நியாயப்படுத்துகிறார்
விமானத்தில் சல்மான் குர்ஷித் நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பை அவர் நியாயப்படுத்தினார்.
‘இலங்கை காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், இந்தியா சார்பில் யாரும் செல்லக்கூடாது’ என்று தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அவசர தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள நிலையிலும், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா முடிவு எடுத்தது ஏன் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
அத்தியாவசியமானது
அவற்றுக்கு பதில் அளித்து சல்மான் குர்ஷித் கூறியதாவது:–
ஈழத்தமிழர் பிரச்சினைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகளை, இலங்கை அரசுடன் பேச வேண்டி உள்ளது. தேசநலனை கருதித்தான் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
இங்கு நடைபெறுவது இரு தரப்பு மாநாடு அல்ல. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிற மாநாடு. இதில் பங்கேற்பது அத்தியாவசியமானது என்றுதான் வந்திருக்கிறேன்.
சட்டசபை தீர்மானம் கலக்கம்
இந்த மாநாட்டின் இடையே, ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது பற்றியும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கிறபோது எதிர்கொள்கிற தாக்குதல்கள் குறித்தும், இந்தியாவின் கருத்துக்களை, கவலைகளை இலங்கை அரசிடம் (அதிபர் ராஜபக்சேயிடம்) எடுத்துச்சொல்கிற வாய்ப்பு கிடைக்கும்.
காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்னை கலக்கம் அடையச்செய்தது.
நியாயப்படுத்த முடியாது
இலங்கையுடன் இந்தியா எதுவும் செய்யக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் விதித்தால், அந்த காரியங்கள் சரியென்று நியாயப்படுத்த முடியாமல் போய்விடும்.
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் நலனுக்காக நாங்கள் எவ்வளவோ செய்கிறோம். போரினால் சின்னாபின்னமான பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருகிற மிகப்பெரிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாலைகள் போடுகிற திட்டங்கள், உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துகிற திட்டங்களிலும் ஈடுபட்டு இருக்கிறோம்.
நீர்த்துப்போகச்செய்யாது
நாங்கள் இங்கு இல்லாவிட்டால், இந்த செயல்களை எப்படி செய்ய முடியும்? எனவேதான், இலங்கைக்கு நாங்கள் செல்லக்கூடாது என அவர்கள் சொல்வது கண்டு கலக்கம் அடைகிறேன். எனது வேலை, தேசிய நலனையொட்டி இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொள்வதுதான்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது என்பது இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச்செய்து விடாது.
அரசியலை அல்ல
காமன்வெல்த் மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்வதால் உள்நாட்டில் வரப்போகிற விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள் என்கிறீர்கள்.
நான் வெளியுறவு கொள்கையைத்தான் கையாள்கிறேன். அதில் உள்ள அரசியலை அல்ல.
புதிய தொடக்கம்
தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றுள்ள மீனவர்களை விடுவிக்கவும், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தவும் இங்குள்ள அரசிடம் வலியுறுத்துமாறு கூறினார்கள். நான் இங்கே வராவிட்டால் அதை எப்படி செய்ய முடியும்?
இந்த தருணத்தில் நாம் கெட்டதை பின்னுக்கு தள்ளி விட்டு, புதிதாக ஒரு தொடக்கத்தை தொடங்குவோம்.
இந்தியாவின் கடமை
இலங்கை தமிழர்கள் நலனுக்காக நாம் நிறைய முதலீடுகள் செய்துள்ளோம். வடக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமர்த்தி உள்ளோம். அதை அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் வெற்றி அடையச்செய்வது இந்தியாவின் கடமை ஆகும். அதை செய்வதற்கு நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.
தமிழர்களுக்கு அரசியல் சட்டத்தின்படியும், இந்திய–இலங்கை உடன்பாட்டின்படியும், கூடுதல் அதிகாரம் வழங்குவதை உறுதி செய்யும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரின் இயலாமை
சல்மான் குர்ஷித்திடம், இலங்கைக்கு, குறிப்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண கவுன்சில் அரசின் முதல்–அமைச்சர் விக்னேசுவரனின் அழைப்புக்கு மதிப்பு அளித்து பிரதமர் மன்மோகன் சிங் பயணம் மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘‘இப்படி ஒரு அழைப்பை தமிழக முதல்–அமைச்சருக்கும், மாநிலத்தின் பிற அரசியல்வாதிகளுக்கும் விடுத்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.
சீனாவால் கவலையா?
‘‘இலங்கையில் சீனாவின் முதலீடுகள் பெருகி வருவது இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதே?’’ என்ற கேள்விக்கு சல்மான் குர்ஷித், ‘‘இலங்கை பிற நாடுகளுடன் வைத்துக்கொள்கிற விவகாரங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நாம் அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? இலங்கையுடனான நமது விவகாரங்களில் நாம் நம்பிக்கையுடன் இருப்போம். அவர்களுடனான உறவை நாம் தொடர்வோம்’’ என பதில் அளித்தார்.
வரவேற்பு
கொழும்பு போய்ச்சேர்ந்த சல்மான் குர்ஷித்தை பண்டார நாயகா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சிவில் விமானத்துறை துணை மந்திரி குணரத்னே வரவேற்றார்.
0 comments:
Post a Comment