Cine

இலங்கையில் கிளிநொச்சி பகுதிக்கு செல்ல முயன்ற சானல் 4 குழுவினர் சென்ற ரெயிலை மறித்து சிங்களர்கள் போராட்டம்

லங்கையில் கிளிநொச்சி பகுதிக்கு செல்ல முயன்ற சானல் 4 குழுவினர் சென்ற ரெயிலை மறித்து சிங்கள அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தலையிட்டு அவர்களை கொழும்பு நகருக்கு அனுப்பி வைத்தனர்.
‘சானல் 4’ தொலைக்காட்சி
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் இலங்கை ராணுவத்தால் பலர் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வை இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ‘சானல் 4’ தொலைக்காட்சி நிறுவனம் ஆவணப்படமாக வெளியிட்டு அம்பலப்படுத்தியது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ரெயிலை மறித்து போராட்டம்
இந்த சூழ்நிலையில், இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கப்பகுதியாக விளங்கிய கிளிநொச்சிக்கு செல்ல சானல் 4 குழுவினர் முடிவு செய்தனர். கொழும்பில் இருந்து வவுனியா செல்லும் ரெயிலில் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.இதனையறிந்த சிங்கள போராட்டக்காரர்கள், அனுராதாபுரம் அருகே ரெயிலை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சில புத்த துறவிகளும் கலந்து கொண்டனர்.
திருப்பி அனுப்பினார்கள்
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பின்னர் தொலைக்காட்சி குழுவினரின் பயணத்தை ரத்து செய்து அவர்களை கொழும்பு நகருக்கு திருப்பி அனுப்பினர்.ஏற்கனவே சானல் 4 தொலைக்காட்சி குழுவினர் கடந்த திங்கட்கிழமை இலங்கை விமான நிலையத்திற்கு வந்தபோது அவர்களுக்கு எதிராக சிங்களர்கள் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது. மேலும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இலங்கையில் உள்ள பெரும்பாலான சிங்கள அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கேள்விக்கணை
இதற்கிடையே, காமன்வெல்த் மாநாட்டையொட்டி நடைபெற்ற வர்த்தக அமைப்பின் கூட்டத்திற்கு ராஜபக்சே புறப்பட்டுச் சென்றபோது அவரை சந்தித்த சானல் 4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஜோனதன் மில்லர் ராஜபக்சேவை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.உடனே அவரையும் சானல் 4 குழுவினரையும் தன்னுடன் தேனீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்த ராஜபக்சே, அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டார்.

0 comments:

Post a Comment

 
Top