Cine

யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து ‘தர்ணா’ போராட்டம்:

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு சொந்தமான 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலங்கை ராணுவம் ஆக்கிரமிப்பதை கண்டித்து, அங்குள்ளவர்கள் ‘தர்ணா’ போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழர்கள் நிலம் ஆக்கிரமிப்பு
இலங்கையில் போர் முடிவடைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் தமிழர்கள் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டு உள்ளது. இதனால் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை இருப்பதோடு, தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள். எனவே தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி இலங்கை அரசை வற்புறுத்தி வருகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, ராணுவம் ஆக்கிரமித்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.
தர்ணா போராட்டம்
இதை கண்டித்து அங்குள்ள தமிழர்கள்  ‘தர்ணா’ போராட்டத்தை தொடங்கினார்கள்.
இதுபற்றி வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியதாவது:–
வலிகாமம் வடக்கு செக்டார் பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலங்கை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள வீடுகளை ராணுவம் இடிக்க தொடங்கி இருக்கிறது. இதை எதிர்த்து சில வீட்டு உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
நிறுத்த வேண்டும்
ராணுவத்தின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து தொடங்கப்பட்டுள்ள இந்த ‘தர்ணா’ போராட்டம் வருகிற 16–ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். நிலத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.
கொழும்பு நகரில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் பகுதிக்கு செல்ல இருக்கிறார். இந்த நிலையில், தமிழர்கள் அங்கு ‘தர்ணா’ போராட்டத்தில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராணுவம் மறுப்பு
ஆனால் இந்த நில ஆக்கிரமிப்பு புகாரை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது.
இதுபற்றி ராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவன் வனிகாசூரியா கூறுகையில்; போரின் போது ராணுவம் தனது வசம் வைத்து இருந்து பயன்படுத்திய பெரும்பாலான இடங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும், புதிதாக எந்த நிலத்தையும் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Top