Cine


தமிழகத்திற்கு வரும் ஜனவரி மாதம் வரை 26 டி.எம்.சி தண்ணீர் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறைச் செயலாளர் சாய்குமார் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், நவம்பர் முதல் 2014ஆம் ஆண்டு ஜனவரி வரை நடுவர் மன்ற தீர்ப்புப்படி, 26 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அந்தந்த மாதத்திற்கான தண்ணீரை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாதிட்ட கர்நாடக அதிகாரிகள், இந்தாண்டு தமிழகத்திற்கு 214 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுவிட்டதாக கூறினர். நடுவர் மன்ற தீர்ப்பில் கூறப்பட்ட அளவை விட இது அதிகமாகும் என்றும் கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மழைக்காலத்தில் உபரியாக திறக்கப்பட்ட தண்ணீரை கணக்கில் எடுத்துக்கொள்ள தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட கண்காணிப்புக்குழு தலைவர் அலோக் ராவத், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 26 டிஎம்சி தண்ணீரை திறக்குமாறு கர்நாடகாவுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் அலோக் ராவத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Top