Cine


ஆவணப் பதிவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சார்பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இனி சொந்தக் கட்டிடம்
நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய இடவசதியின்றியும், சிறிய இடங்களுக்கு அதிக அளவில் வாடகை தரவேண்டிய நிலையையும் கருத்தில் கொண்டு, வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
எந்தெந்த அலுவலகங்கள்?
அதன்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் புதுச்சத்திரம்; வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் கலவை; திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் கீழ்கொடுங்காலூர்; காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், பெரிய காஞ்சீபுரம் (இணை சார் பதிவாளர்–II அலுவலகம்); தூத்துக்குடி மாவட்டம் புதூர் மற்றும் கடம்பூர்; ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி; கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை; திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை; ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி; கடலூர் மாவட்டம் கம்மாபுரம்; புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்; திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய 20 இடங்களில் ரூ.9 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள்; சென்னையில் ரூ.49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத்துறை பயிற்சி நிலையத்திற்கு தங்கும் விடுதி, என மொத்தம் ரூ.10 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சார்பதிவாளருடன் இணையதளம் மூலம் பொதுமக்கள் ஆவணப் பதிவிற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் இணையவழி பதிவு நேர ஒதுக்கீடு செய்யும் வசதியை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன்மூலம் பதிவு நடைமுறை செம்மைப்படுத்தப்படுவதுடன், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்கும் நேரமும் வெகுவாக குறையும்.
கண்காணிப்பு கேமராக்கள்
பொதுமக்களுக்கு விரைவு மற்றும் வெளிப்படையான சேவைகள் அளித்திடவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் தரகர்களின் நடமாட்டத்தினை தடுத்திடவும், மோசடி பதிவு மற்றும் ஆள்மாறாட்டத்தினை தடுத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகள் (இண்டர்நெட் புரோட்டாகால் கேமரா) நிறுவுதல் மற்றும் சார்பதிவகங்களில் அளிக்கப்படும் சேவைகளை 9 மண்டல அலுவலகங்களில் இருந்தும், பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் இருந்தும் தொலைக் கண்காணிப்பு (ரிமோட் மானிட்டரிங்) செய்யும் திட்டம் 3.5.12 அன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக வன், மென்பொருட்கள் வாங்குதல் மற்றும் உரிய சாதனங்கள் நிறுவுதல் ஆகியவற்றிற்கான முதலீட்டு செலவினமாக ரூ.3 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 705 தொகையும், குறுந்தகடுகள் கொள்முதல் மற்றும் இத்திட்டப் பணியினை மேற்கொள்வதற்காக பணியமர்த்தப்படும் நபர்களுக்கான சம்பளத்தொகை உள்ளிட்ட தொடர் செலவினமாக 9 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 280 ரூபாயும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சி.டி.க்களிலும் பதிவு
மேலும், இத்திட்டத்தை சுயசார்பு உடையதாகவும், வருவாய் ஈட்டுவதாகவும் அமைத்திட ஆவணப்பதிவு மற்றும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு குறுந்தகடுகளை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களுக்கு ரூ.50 வழங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சார்பதிவகங்களில் நடைபெறும் ஆவணப்பதிவு மற்றும் திருமணப் பதிவுகளை ஒளி மற்றும் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது.
அவ்வாறு பதிவு செய்யப்படும் ஒளிப்பதிவுகள், ஆவணப் பதிவு மற்றும் திருமணப்பதிவிற்கு நல்ல அத்தாட்சியாகும். ஆவணப்பதிவு, திருமணப்பதிவுகளின்போது எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள் துறைக்கு மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்ல சான்றாக அமையும்.
கண்காணிப்புத் திட்டம்
இதுதவிர, சார்பதிவாளர் அலுவலகங்களை மண்டல அலுவலகங்களிலிருந்தும் துறைத் தலைமை அலுவலகத்திலிருந்தும் தொலைக் கண்காணிப்பு செய்யப்படும். பதிவுகள் ஒளிப்பதிவு செய்யப்படுவதால் எதிர்காலத்தில் ஆள்மாறாட்டம், போலி ஆவணப்பதிவு ஆகியவை குறித்த விசாரணைக்கு சான்றாக அமையும். மேற்கண்ட சிறப்பம்சங்களைக் கொண்ட சுயசார்பு உடைய இந்தத் திட்டத்தினால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
பதிவுத்துறையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இணைய நெறிமுறை புகைப்படக்கருவிகள் நிறுவிடும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

0 comments:

Post a Comment

 
Top