‘பேஸ்புக்’ மூலம் மலர்ந்த காதல்: என்ஜினீயரிங் பட்டதாரிகள் மாலை மாற்றி திருமணம் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு:
‘பேஸ்புக்’ மூலம் காதலித்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் பேச்சிப்பாறை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள காரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அனீஷ் (வயது 27). என்ஜினீயர். மதுரையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘பேஸ்புக்’ மூலம் ஒரு இளம்பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார்.அந்த பெண்ணின் பெயர் அபிநயா (22). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர். இவரும் என்ஜினீயரிங் முடித்துள்ளார். நட்பில் தொடங்கிய இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்த்தனர்.அபிநயாவும், அனீசும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதல் விவகாரம் அபிநயா குடும்பத்துக்கு தெரியவர வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து அவரை வீட்டுச்சிறையில் வைத்ததாக கூறப்படுகிறது.
மாலை மாற்றி திருமணம்:
பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்ததால் காதலர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதன்படி கடந்த 30–ந் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். பின்னர் நேற்று பேச்சிப்பாறையில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் அபிநயா குடும்பத்தினர் மூலம் அனீசுக்கு மிரட்டல் வந்ததாக தெரிகிறது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில ரவுடிகள் மூலம் மிரட்டியதாகவும், போலீசாரை வைத்து வேவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் பயந்துபோன காதலர்கள் இன்று நாகர்கோவிலுக்கு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். இதில் பெற்றோர் மிரட்டலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment