இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது பற்றி காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் முடிவு எடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
காமன்வெல்த் மாநாடு
இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 15–17 தேதிகளில் காமன்வெல்த் மாநாடு நடக்கிறது.இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு உள்நாட்டு போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டம், கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டதும், மனித உரிமைகள் மீறப்பட்டதும், தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டதும் சர்வதேச சமூகத்தை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. உலகில் வேறு எங்கும் நடந்திராத அளவுக்கு தமிழ் இனத்தின் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக சர்வதேச நோக்கர்கள் கருதினர்.
தமிழக சட்டசபை தீர்மானம்
எனவே, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கரத்தை வலுப்படுத்துவதாக அமையக்கூடிய காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும், இதையே வலியுறுத்தி வருகின்றன.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம், அனைத்து கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த 24–ந் தேதி நிறைவேற்றப்பட்டது. தமிழகம் எங்கும் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
பிரதமர் பங்கேற்பதாக தகவல்
கடந்த 30–ந் தேதி டெல்லியில் நடந்த காங்கிரஸ் உயர் மட்டக்குழுவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய நிதி மந்திரி ப.சிதம்பரம், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோர், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக்கூடாது என கூறியதாக தெரியவந்தது.இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் இதில் கலந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மத்திய மந்திரிகள் எதிர்ப்பு
ஆனால் அடுத்த நாளே, இலங்கை உள்நாட்டு போரில், விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றி வந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் ‘சானல் 4’ டெலிவிஷன் வெளியிட்டது, அது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள எதிர்ப்பும் வலுக்கத்தொடங்கியது.மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், வி.நாராயணசாமி ஆகியோர், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக்கூடாது என பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
உயர்மட்டக்குழு கூட்டம்
இந்த நிலையில், 15–ந் தேதி காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, அவரது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் உயர் மட்டக்குழு கூட்டம் நடந்தது.இதில், பிரதமர் மன்மோகன் சிங், மூத்த மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், ஷிண்டே, கபில்சிபல், சல்மான் குர்ஷித், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த கூட்டம் நீடித்தது.
எதிர்ப்பும், ஆதரவும்
இதில், ‘‘காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டால், அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்; எனவே கட்சியின் நலனை காக்கிற வகையிலும், தமிழ் மக்களின் உணர்வினை மதிக்கும் வகையிலும் பிரதமர் அதில் கலந்துகொள்ளக்கூடாது’’ என மூத்த மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் கூறியதாக தெரிகிறது.அதே போன்று, ‘‘பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்துகொள்ளாவிட்டால் அது சர்வதேச அளவில் குறிப்பாக காமன்வெல்த் நாடுகளிடையே இந்தியாவின் நிலையை பாதிக்கும்’’ எனவும் சிலர் குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சரியான முடிவு எடுப்பார் பிரதமர்
காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டத்துக்கு பின்னர் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன், தமிழக அரசியல்கட்சிகளின் தீவிர கருத்து, நாட்டின் நலன், இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரியின் கருத்து ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இந்தியாவாழ் தமிழர்களுக்கு மிக முக்கிய விஷயம். மிகுந்த கவலைக்குரிய அம்சம்’’ என கூறினார்.‘‘நாட்டின் வெளியுறவு கொள்கை, மாநிலத்தை மையமாக கொண்டு தீர்மானிக்கப்படுமா?’’ என்ற கேள்விக்கு சுர்ஜிவாலா, ‘‘தேசியநலன்தான் முதன்மையானது. எல்லாவற்றையும் விட உயர்ந்தது இதுதான். பிரதமர் சரியான முடிவு எடுப்பார்’’ என பதில் அளித்தார்.
முடிவு இல்லை
இதன் காரணமாக முடிவு எடுக்காமலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது.இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் இன்னும் கூடுதல் ஆலோசனை தேவைப்படுகிறது. எனவே காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வதா, வேண்டாமா என்பது பற்றி விரைவில் இன்னொரு சுற்று ஆலோசனை நடைபெறும்’’ என தெரிவித்தன.இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதற்கிடையே காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வரும் 12–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடத்த 21 தமிழர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment