அதிகரிக்கும் கடற்கரை மரணங்கள்…
ஆர்வத்தின் உச்சத்துக்குச் செல்லும் எவரும், அந்த அலைகளின் அரவணைப்பை ஆரத் தழுவ ஆயத்தமாகத்தான் செய்வார்கள்.
ஆரத் தழுவம் அலைகள் சில நேரங்களில் ஆளையே விழுங்கும் ஆபத்தை உணராமல்.
ஆம்.
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது உலகிலேயே இரண்டாவது மிக நீளமான சென்னை மெரீனா கடற்கரை.
இந்த கடல் பகுதியில் குளிக்க நினைத்து உயிரை துறந்தவர்கள் ஏராளம் என்ற அதிர்ச்சி கலந்த சோக செய்தி நம்மைச் சுடத்தான் செய்கிறது.
ஆபத்தான கிழக்கு கடற்கரை
அரபிக்கடலுக்கு இணையாக பார்க்க, ரசிக்க அழகான கடற்கரையாக இருந்தாலும், வங்காள விரிகுடா கடற்பரப்பு ஆபத்தானது என்கிறார்கள் கடல்சார் அறிஞர்கள்.
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான சென்னை மெரினாவில் ஆண்டு தோறும் 50 பேருக்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
அதிக ஆபத்தான கடல் பகுதியாக கருத்தப்படும் மெரினாவில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள் காவல்துறையினர் .
அடுத்ததாக, பார்க்க அழகாக இருந்தாலும், அலை அதிகளவில் இருக்கும், பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரையில் 25 பேர் ஆண்டு தோறும் மூழ்கி இறப்பதாகச் சொல்கிறது காவல்துறையிடம் உள்ள ஆய்வுப் பட்டியல்.
இதில் அதிகம் உயிரிழப்பது பள்ளி மாணவர்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
கானாத்தூரிலிருந்து கொட்டிவாக்கம் வரை உள்ள கடற்கரைப் பகுதியில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழக்கின்றனர்.
மிகவும் அடர்த்தியான அலைவீச்சு கொண்ட கடல் பகுதியான கோவளத்தில் ஆண்டுக்கு 25 பேர் கடலில் மூழ்கி இறப்பதாகவும் சொல்கிறது காவல்துறையின் புள்ளிவிபரம்.
வரலாற்றுப் புகழ்வாய்ந்த மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் வருடத்திற்கு 30 சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிக்கும் போது மூழ்கி பலியாகிறார்கள்.
குளிப்பதற்கு ஏதுவானது அல்ல. ஏன்?
கடலில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க காவல்துறையினர் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்காமல் போனதற்கு என்ன காரணம்? தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன?
13 கிமீ தூரத்திற்கு பறந்து விரிந்து கிடக்கும் அழகிய சென்னை கடற்கரையைக் காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடல் அழகை ரசிக்க வரும் இவர்கள் அதன் ஆபத்தை உணராமல் கடலில் குளிக்க நேரிடும் போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 212 ஆக இருக்கிறது என்பது மத்திய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரம்.
கடலில் ஏற்படும் சுழற்சி காரணமாகவும் மணல் போக்கு காரணமாகவும் குளிப்பவர்கள் இழுத்துச் செல்லப்டுவதால், சென்னையில் உள்ள இந்த கடற்கரைகள் குளிப்பதற்கு ஏற்றவை அல்ல என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
கடலின் நீரோட்டம் அடிக்கடி மாறுவதால் நீச்சல் தெரிந்தவர்கள் குளித்தாலும் உயிர் இழக்க நேரிடுகிறது என்று கூறும் மீனவர்கள், எனவே தான் தாங்களே கடலில் குளிக்க அஞ்சுவதாகக் கூறுகின்றனர்.
அரபிக் கடலைக் காட்டிலும் வங்காள விரிகுடா ஆபத்தான கடற்பகுதி என்பது வல்லுநர்களின் கருத்து. கடலில் மூழ்கி இழுத்துச் செல்பவர்களை கண்காணிப்பதற்கு காவல்துறையினர் கடலோர காவல் படையின் உதவியை நாடலாம் என்பது ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரின் அறிவுரை.
கடற்பகுதி ஆபத்தாக உள்ளதாகவும் கடலில் குளித்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் 13 கிமீ நீள கடற்கரைக்கு இந்த பலகைகள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்று சொல்லும் சமூக ஆர்வலர்கள், காவல்துறை சார்பில் வாங்கப்பட்ட கடல் மணலில் விரைந்து செல்லக்கூடிய "ஆல்டெரைன்" என்ற வாகனமும் தற்போது என்னவானது என்ற கேள்வியை எழுப்புகின்றனர்...
0 comments:
Post a Comment