Cine



இசைப்பிரியா கொல்லப்பட்டதற்கு மன்மோகன் சிங் அரசுதான் காரணம். இந்தியா கொடுத்த ஆயுதங்கள், இலங்கைக்கு உதவி செய்த இந்திய கடற்படை, விமானப் படைகளுமே லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம். இவ்வாறு மதிமுக செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வலியுறுத்தியும் சேலம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித் துறை அலுவலகம் மீது கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சேலத்துக்கு திங்கட்கிழமை சென்ற வைகோ, மத்திய சிறைக்குச் சென்று கொளத்தூர் மணியைச் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது பொய் வழக்குகள், அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் ஆதரவாளர்களைச் அச்சுறுத்தும் விதமாகத் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கோ, எனக்கோ வன்முறையின் மீது நம்பிக்கை கிடையாது. வருமான வரித் துறை அலுவலகத்தில் சாக்குப் பையில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து வீசப்பட்ட சம்பவத்தில் கொளத்தூர் மணிக்கு தொடர்பு இல்லை.
தனி ஈழம் அமைய வேண்டும் என கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய தமிழக அரசு, இப்போது சிங்களவர்களுக்கு இணையாகத் தமிழர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று முற்றிலும் முரணான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஈழத்தில் 8 தமிழர்கள் கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லப்பட்ட போது, இது ஏதோ பழைய படம் போலத் தெரிகிறதே என்று ஏளனம் பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி.
கடந்த 2008-இல் இசைப்பிரியா கொல்லப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இப்போது கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இத்தனை நாள்களாக கோமாவில் இருந்தாரா என்று தெரியவில்லை.
இசைப்பிரியா கொல்லப்பட்டதற்கு மன்மோகன் சிங் அரசுதான் காரணம். இந்தியா கொடுத்த ஆயுதங்கள், இலங்கைக்கு உதவி செய்த இந்திய கடற்படை, விமானப் படைகளுமே லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம்.
இவர்களின் நாடகத்தைக் கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குவதற்காக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகளைச் சேராதவர்கள் கிளர்ந்து எழ வேண்டும். தமிழர்கள் அங்கு சிந்திய இரத்தம் வீண் போகக் கூடாது என்றார்.
மதிமுக மாவட்டச் செயலர் தாமரைக்கண்ணன், வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment

 
Top