சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்கும் பட்சத்தில், நாட்டுக்கு உழைத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஹாக்கி வீரர் தயான்சந்த் ஆகியோருக்கும் ஏன் இன்னும் பாரத ரத்னா வழங்கப்படவில்ல என அரசியல் கட்சியினர் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.வாஜ்பாய் அனைவராலும் போற்றப்படக்கூடியவர் என்றும் அவருக்கு பாரதரத்னா வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவரது விருது இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காசு வாங்கி ஆடிய சச்சினுக்கு கொடுக்கும் போது ஏன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க கூடாது என்று பலரும் கேட்டுள்ளனர்.
இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த நிர்வாகி சிவானந்த் திவாரி கூறியிருப்பதாவது:
சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது தவறானது. இவர் நல்ல விளையாட்டு வீரர்தான், இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் ஒன்றும் இலவசமாக ஆட வில்லை. பணம் பெற்றுதான் விளையாடினார். இதன் மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார். இவருக்கு பாரத ரத்னா கொடுக்கப்படும் போது , இவரைப்போல இந்தியாவுக்காக ஆடியவர் ஹாக்கி வீரர் தயான்சந்த், இவர் பல பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். இவருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கப்படவில்லை ? இவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். விருதுகள் வழங்குவதில் பாரபட்சம் வழங்கப்படுவதால் இந்த விருது வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு திவாரி கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு விருது : முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் வாஜ்பாய், தயான்சந்த் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
காங்., கூட்டணியில் உள்ள தேசியமாநாட்டு கட்சி பரூக்அப்துல்லா, வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர் , இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
நிதீஷ்குமார் ஆதரவு : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், கோரியுள்ளார். இவர் சமீபத்தில் 17 வருட பா.ஜ., நட்பை முறித்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஜ்பாய் காலத்தில் இவரது கட்சி சார்பில் கூட்டணி அரசில் அமைச்சர் இடம் பெற்றிருந்தார்.
ராமாராவுக்கு வேண்டும் விருது: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமாராவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; ராமாராவ் இந்த நாட்டில் பல சாதனைகள் புரிந்துள்ளார். அரசியல் மூலம் நாட்டுக்காக அரும்பாடு பட்டுள்ளார். திரை உலகில் சேவை புரிந்துள்ள இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். தற்போது வரும் 2014 தேர்தலை கணக்கில் கொண்டு இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ஆதரவு : வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது தருவதற்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'வாஜ்பாய் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு மனிதர். அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா வழங்குதில் எந்த ஆட்சேபனையும் நான் தெரிவித்தது இல்லை,' என்றார்
0 comments:
Post a Comment