இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக சட்டசபையிலும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது என்று, காங்கிரஸ் மேலிட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையில், விடுதலைப்புலிகள் இயக்க ஊடக பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியா படுகொலை குறித்து சானல் 4 டி.வி. வெளியிட்ட புதிய வீடியோ, தமிழகத்தின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், மூத்த மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணியும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘‘உலகம் முழுவதும் உள்ள 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், மத்திய மந்திரிசபை பாதுகாப்பு குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று, ஏ.கே.அந்தோணி கூறி இருக்கிறார்.
மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், பிரதமர் இலங்கை செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறி வந்தாலும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பதே இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று கருத்து தெரிவித்து வருகிறார். அதேபோல் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், உளவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகர்கள், பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள். இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்கவும் பிரதமர் கலந்து கொள்வது அவசியம் என்பது அவர்கள் தரப்பு வாதமாகும்.
இருப்பினும் மத்திய மந்திரிகளும், தமிழகத்தில் காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க.வும் பிரதமர் இலங்கை செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, விரைவில் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment