Cine

பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ கேஸ் சிலிண்டர்: நாடு முழுவதும் விற்பனைக்கு அனுமதி:


டெல்லி: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி திங்கள்கிழமை ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய வெடிபொருள்கள் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் அனுமதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 5 கிலோ சிலிண்டர் விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
ஆனால், இந்த சிலிண்டர்களுக்கு மானிய விலையில்லை. முழுத் தொகை கொடுத்து வாங்க வேண்டும். வழக்கமாக, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயுவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்து விநியோகஸ்தர்கள் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கும். வீட்டு உபயோகத்துக்கான குறிப்பிட்ட சில சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும். உதாரணமாக, டெல்லியில் ஆண்டுதோறும் மானிய விலையில் வாடிக்கையாளருக்கு 14.2 கிலோ எடையுள்ள தலா 9 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. மானியம் அல்லாத விலையில் தலா ஒரு சிலிண்டர் ரூ. 802-இக்கு விற்கப்படுகிறது. மற்ற நகரங்களில் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கும். இந்நிலையில், நகரங்களில் அதிகரித்துவரும் தகவல் தொழில்நுட்பம், பிபிஓ, மென்பொருள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் நலனுக்காக மானியம் அல்லாத விலையில் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை விற்பனை செய்ய பெட்ரோலியத் துறை திட்டமிட்டது. அதன்படி, சோதனை அடிப்படையில் 5 கிலோ சிலிண்டர்களை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
 அத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் 5 கிலோ சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: "விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின்படி, சந்தை விலையில் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர், அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பெட்ரோல் நிலையங்களில் காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் ரெகுலேட்டர் அல்லது ரெகுலேட்டர் அல்லாத சிலிண்டர் பெற, முதல் முறை தொகையாக ரூ. 1000 மற்றும் வரித் தொகையாக ரூ. 250 செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, சந்தையில் விற்கப்படும் மானியம் அல்லாத கட்டணத்தை செலுத்தி அவர் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரைப் பெறலாம். வெளியூர்களிலிருந்து இடமாற்றலாகி வந்தோர், மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், பிபிஓ நிறுவனங்களில் பணிக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இத்திட்டம் மிகுந்த பயன் அளிக்கும்' என்றார் வீரப்ப மொய்லி.
read more: http://nznow.blogspot.in/

0 comments:

Post a Comment

 
Top