சென்னை : மத்திய உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கும் விதமாக, "ஆபரேஷன் அம்லா" என்ற பாதுகாப்பு ஒத்திகை, தமிழக கடலோர மாவட்டங்களில் நடக்கிறது. இதில், பயங்கரவாதிகள் போர்வையில் வந்த, 47 பாதுகாப்பு வீரர், சிக்கினர். கடலோரப் பகுதிகள்
மும்பையில், சில ஆண்டுகளுக்கு முன், கடல் வழியாக ஊடுருவி, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடலோரப்
பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.மத்திய உளவுத் துறையினர், பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக, அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருவதால், கண்காணிப்பில் உள்ள குறைகளை சீரமைக்கும் நோக்கில், "ஆபரேஷன் அம்லா" என்ற பெயரில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தமிழகத்தில், சில மாதங்களுக்கு முன், இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. சமீபத்தில், தொடர்ந்து, கடல் வழியாக தங்கம் கடத்தல் சம்பவம் நடந்தது. அப்போதே, தங்கம் கடத்தல் என்ற பெயரில், பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.உளவுத் துறை எச்சரித்தது சமீபத்தில் பாட்னா, மணிப்பூர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.இதைத் தொடர்ந்து, "பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தலாம்" என, மத்திய உளவுத் துறை
எச்சரித்தது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். தமிழக எல்லைப் பகுதிகளிலும் ஊடுருவல் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகம், ஆந்திர மாநிலங்களுடன் புதுச்சேரியும் இணைந்து, "ஆபரேஷன் அம்லா" பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவெடுக்கப்பட்டது. தமிழகம், 1,076 கி.மீ., துார கடற்கரையை கொண்டது. இங்கு, கடலோர காவல் படை, கடலோர காவல் குழுமம், மீன்வளத் துறை, தமிழக போலீஸ் இணைந்து,
பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கிய இந்த ஆபரேஷன், இன்று மாலை, 6:00 மணி வரை நீடிக்கிறது. தமிழகத்தில் இந்த ஆபரேஷனில், தீபாவளி பாதுகாப்பு காரணமாக, சென்னை போலீசாரும், தேவர் குருபூஜை காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட போலீசாரும் பங்கேற்கவில்லை; துாத்துக்குடி, நாகை உள்ளிட்ட மற்ற கடலோர மாவட்டங்களில், உள்ளூர் போலீசார் இதில் பங்கேற்றனர். இந்த ஒத்திகைக்காக முன்னதாகவே, தமிழக மீன்வளத் துறை மற்றும் கடலோர காவல் படையினர், மீனவ மக்களுக்கு, பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாகவும், ஊடுருவல் தொடர்பாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.ஒத்திகை மீனவர்கள், அடையாள அட்டை மற்றும் படகு உரிமம் வைத்திருக்க வேண்டும்; சந்தேகப்படும் படகு, நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை, 6:00 மணிக்கு, ஒத்திகை துவங்கியது. பயங்கரவாதிகள் போர்வையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், கடலோர காவல் படை மற்றும் காவல் குழும வீரர்கள் ஆங்காங்கே அனுப்பப்பட்டனர்.இதில், நேற்று மாலை நிலவரப்படி, சென்னை, காசிமேடு, எட்டு பேர்; மகாபலிபுரம், நான்கு பேர்; கோவளம், இரண்டு பேர், நகருக்குள் ஊடுருவ முயன்ற போது, ரோந்தில் இருந்த, கடலோர காவல் படையினரிடம் சிக்கினர்.கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரோக்கியபுரம் முதல், நீரோடி வரையில், உள்ளூர் போலீசார் உதவியுடன் ஆபரேஷன் அம்லா ஒத்திகை நடந்தது. துாத்துக்குடியில், புதிய பஸ் நிலையம் பகுதியில், பயங்கரவாதிகள் போர்வையில் சுற்றித் திரிந்த, ஆறு பேர்; கடலோர பகுதியான இனிகோ நகரில், இரண்டு பேர் போலீசாரிடம் சிக்கினர்.நாகை, தரங்கம்பாடியில், கடலில், 8 கி.மீ., துாரத்தில், சந்தேகத்திற்கிடமான சிலர் படகில் செல்வது குறித்து, மீனவர்கள், கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர். அந்த தகவல் அடிப்படையில், ரோந்துப் பணியில் இருந்த கடலோர காவல் படையினர், விரைந்து சென்று, நால்வரை பிடித்தனர்; ராமநாதபுரத்திலும் சிலர் பிடிபட்டனர்.நேற்று இரவு வரை, தமிழகம் முழுவதும், 47 பேர் பிடிபட்டதாக கூறப்படுகிறது.இந்த ஆபரேஷனை பொறுத்தவரை, முதல் முறையாக, இரண்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி இணைந்து நடத்துவது குறிப்பிடத்தக்கது.இன்னும், 24 மணி நேரம் மீதமுள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் பிடிக்கும் பணியில், போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.சோதனை சாவடிகள்"ஆபரேஷன் அம்லா"வைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளிலும் கூடுதல் போலீசார், சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment