Cine

மங்கள்யான் விண்ணில் பறக்க தயாரானது..


மங்கள்யான் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்புகிறது.
பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படும் மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி பயணத்தை தொடங்கும் எனவும், அதன் சுற்றுப்பாதையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இணையும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதற்காக போர்ட் பிளேர், பெங்களூரூ அருகே உள்ள பைலாலு, புருனே ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களிலும் முன்னேற்பாட்டுப் பணிகளில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுப்பட்டுள்ளனர்.
450 கோடி ரூபாய் செலவில் விண்ணில் ஏவப்படும் மங்கள்யான் வெற்றிப்பெற்றால், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
இதனிடையே, மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட வேண்டி இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் திருப்பதியில் வழிபாடு நடத்தினார்.

0 comments:

Post a Comment

 
Top