Cine

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது திருப்தி அளிக்கிறது ‘இலங்கையை பிளவுபடுத்த விடமாட்டோம்’ ராஜபக்சே பேட்டி

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது திருப்தி அளிப்பதாகவும், இலங்கையை பிளவுபடுத்த விடமாட்டோம் என்றும் ராஜபக்சே கூறினார்.
மனித உரிமை மீறல்கள்
காமன்வெல்த் அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி, கொழும்பு நகரில் இலங்கை அதிபர் ராஜபக்சே  பத்திரிகையாளர்களை சந்தித்தார். 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், ஒரே ஒரு கேள்வியைத்தவிர அனைத்துக்கேள்விகளும் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவே அமைந்தன.
ராஜபக்சேயிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
டேவிட் கேமரூன்
கேள்வி:–‘ராஜபக்சேயை சந்திக்கும்போது அவரிடம் கேட்பதற்காக என்னிடம் பல கடினமான கேள்விகள் இருக்கின்றன’ என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறி உள்ளாரே?
பதில்:–நான் அவரை (டேவிட் கேமரூன்) சந்திப்பேன். அவரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்துள்ளேன். நான் அவரை சந்திக்கிறபோது, அவரிடம் கேட்பதற்கு என்னிடமும் சில கேள்விகள் உள்ளன. அவற்றை நான் எழுப்புவேன்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
கேள்வி:–உலகின் மோசமான தீவிரவாத அமைப்பினை ஒழித்து விட்டீர்கள். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். அது சரி, போரினால் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை எப்படி காக்கப்போகிறீர்கள்? (இந்த கேள்வியை ஜெனீவாவை சேர்ந்த இலங்கை பத்திரிகையாளர் எழுப்பினார்)
பதில்:–எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளேன். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அவர்களுடன் கலந்து ஆலோசிக்கவும், அவர்கள் கூறுவதை கேட்கவும் தயாராக இருக்கிறோம்.
30 ஆண்டுகளாக கஷ்டம்
ஆனால் மற்றொரு பக்கம் விடுதலைப்புலிகள் இங்கே மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். 14 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்து உள்ளனர். அப்பாவி மக்களை கொன்றதையும், பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதையும் அவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர். அவர்கள் ராணுவத்தை எதிர்த்து போரிட்டவர்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஒரு அர்த்தமுள்ள நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறோம். சிறார் வீரர்கள் ஒரு மாதத்துக்குள் விடுவிக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் இது செய்தி. ஆனால் நாங்கள் இதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டி இருந்தது. 30 ஆண்டுகள் நாங்கள் கஷ்டங்கள் அனுபவித்தோம். அப்போது உயிரிழப்புகள் நேரிட்டபோது யாரும் அதை பிரச்சினை ஆக்கவில்லை.
பிளவுபடுத்த விடமாட்டோம்
இலங்கையில் கடந்த 4 ஆண்டுகளில் ஒருவர்கூட கொல்லப்படவில்லை. எந்தவொரு தீவிரவாத செயலும் நடைபெறவில்லை. இங்கே அமைதி தவழ்கிறது.
புலம் பெயர்ந்தவர்களின் மனங்களையும் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கிறோம். அதே நேரத்தில் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவின் நிலை
கேள்வி:–காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி மட்டத்தில் கலந்து கொள்வது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
பதில்:–எனக்கு திருப்திதான்.
கேள்வி:–தமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பு அளித்துத்தான் பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறதே?
பதில்:–அவர் (பிரதமர் மன்மோகன்சிங்) என்னிடம் அப்படிசொல்லவில்லையே?
(இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூறியதை தொடர்ந்து, ‘என்னால் பங்கேற்க இயலவில்லை’ என்று மட்டுமே ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதினார். காரணம் கூறவில்லை. இதையே ராஜபக்சே இப்படி குறிப்பிட்டார்.)
ஏமாற்றம் அளிக்கிறதா?
கேள்வி:–இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறதா?
பதில்:– இல்லை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் நடந்த காமன்வெல்த் மாநாட்டிலும் இந்திய பிரதமர் கலந்துகொள்ளவில்லை. இங்கே வெளியுறவுத்துறை மந்திரி (சல்மான் குர்ஷித்) வந்துள்ளார். அது எனக்கு திருப்தியை தருகிறது.
இளவரசர் சார்லஸ்
கேள்வி:–ராணி எலிசபெத் தனக்கு பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி உள்ளார். அவர் உங்களுடன் கை குலுக்குகிறபோது, இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்புகிறபோது, இளவரசர் சார்லசிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சுதந்திரமான ஆணையம் ஒன்றை இலங்கை அமைக்குமா?
பதில்:–நாங்கள் கை குலுக்குவதில்லை. இலங்கையில் நாங்கள் ‘அயோ போவன்’ என்றுதான் சொல்வோம். (வணக்கம் என்றுதான் சொல்வோம்). மன்னராக இருந்தாலும், அரசியாக இருந்தாலும், பிச்சைக்காரனாக இருந்தாலும் இதைத்தான் செய்வோம்.
அதன்பின்னர் இளவரசர் சார்லசுடன் நாங்கள் கலந்து ஆலோசிப்போம். கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்து இருக்கின்றன. பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரு அதிபரே கொல்லப்பட்டார். இன்றைக்கு இலங்கையில் யாரும் கொல்லப்படுவதில்லை.
புகார் செய்யலாம்
போர் முடிந்து விட்டதற்காக மக்கள் பாராட்டுகிறார்கள். 30 ஆண்டுகளாக மக்கள் கொல்லப்பட்டு வந்தனர். ஒருவழியாக இப்போது நாங்கள் அதை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். இலங்கையில் இப்போது கொலைகள் நடக்கவில்லை.
இலங்கையில் சட்ட அமைப்பு உள்ளது. மனித உரிமை ஆணையம் இருக்கிறது. போரினால் கற்ற படிப்பினைகள் மற்றும் மறுவாழ்வு ஆணையம் உள்ளது. காமன்வெல்த் அமைப்பு அதை வலுப்படுத்த உரிமை உள்ளது. போரின்போது நடந்ததாக கூறப்படும் சித்ரவதைகள், கற்பழிப்பு, கொலை தொடர்பாக அவற்றில் புகார் செய்யலாம்.
இலங்கைக்கு வாருங்கள்
நீங்கள் இந்த நாட்டின் கலாசாரத்தை மதிக்க வேண்டும். ஏதாவது மீறல்கள் நடந்திருந்தால், யார் அதை செய்திருந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் அதைச்செய்ய தயாராக இருக்கிறோம். நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நாம் சந்தித்து, விவாதிக்கலாம். நீங்கள் கண்டறியலாம். இந்த நாட்டின் சட்ட முறையை நீங்கள் மதிக்க வேண்டும்.
இலங்கை நிலவரத்தை கண்டறிய விரும்புகிறவர்கள், இங்கே வரவேண்டும். விடுதலைப்புலிகளின் அனுதாபிகளுடன் மட்டுமல்ல, எங்களுடனும் பேச வேண்டும்.
இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

0 comments:

Post a Comment

 
Top