Cineசென்னைக்கு தென்கிழக்கே வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மதியம் 12½ மணி அளவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
பலத்த மழை
இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 22 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 14 செ.மீ. மழையும், சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
சென்னை நகரிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
11 பேர் பலி
இந்த மழைக்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே மழையின் காரணமாக தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி ஆனார்கள்.
திருச்சியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது. திருச்சி ஆழ்வார்தோப்பில் ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 2 பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கரியமாணிக்கம் தழுதாளப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (வயது 46) என்பவர் திருவானைக்காவல் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மழையின் காரணமாக நிலவிய கடுமையான குளிர் காரணமாக அவர் சுருண்டு விழுந்து பலியானார்.
சுவர் இடிந்து பெண் சாவு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தானூரைச் சேர்ந்த வீரமணி என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீரமணியின் மனைவி விஜய சாமுண்டீஸ்வரி (45) இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். வீரமணி, அவரது மகன் பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் இறந்தார். மரக்காணத்தில் மரம் முறிந்து விழுந்ததில் சதீஷ்குமார் என்ற வாலிபர் பலி ஆனார்.
கோட்டகுப்பம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் என்ற கடலில் குளித்த மதன்ராஜ் (15) என்ற 10–வது வகுப்பு மாணவரை ராட்சத அலைகள் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டன. இவர் புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ஆவார்.
மின் கம்பங்கள் சாய்ந்தன
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், பொறையாறு, மணல்மேடு ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையினால் மயிலாடுதுறை, மணல்மேடு, பொறையாறு, சீர்காழி பகுதிகளில் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. 650–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதாக மாவட்ட கலெக்டர் டி.முனுசாமி தெரிவித்தார். மேலும் ஏராளமான மரங்களும் வேறோடு சாய்ந்தன. உடனே அவற்றை அப்புறப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள 114 ஏரிகளும், 92 குளங்களும் நிரம்பி வருகின்றன.
கடலூர் பகுதியில் பெய்த மழையினால் கெடிலம் அணை நிரம்பி வழிந்தது.
பயிர்கள் மூழ்கின
தேனி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் ஆண்டிப்பட்டி அருகே பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் சோளப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கொடைக்கானல் நகரில் பெய்த மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக தூத்துக்குடியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை நீடித்தது. கயத்தாறில் சுமார் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வில்லவிளையில் மரிய புஷ்பம் என்பவரின் வீடு நள்ளிரவில் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் வேறு அறையில் தூங்கியதால் உயிர் தப்பினர்.
சென்னை ஏரிகள்
மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை பூண்டி ஏரிக்கு நேற்று காலை நிலவரப்படி 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஏரியின் நீர் இருப்பு 376 மில்லியன் கன அடியாக உயர்ந்து உள்ளது.
இதே போன்று புழல் ஏரிக்கு வரும் நீர் வரத்து 336 கன அடியாக உள்ளது. இதனால் புழல் ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை 1,520 மில்லியன் கன அடியாக அதிகரித்தது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,240 கன அடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் அந்த ஏரியின் நீர் இருப்பு 816 மில்லியன் கன அடியாக உயர்ந்து உள்ளது. சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 163 மில்லியன் கன அடியாக உயர்ந்து இருக்கிறது.
மழை நீடிக்கும்
இதற்கிடையே கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கேரளாவையொட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) அனேக இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
நாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரையை கடந்ததன் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது. இது தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது. கரையை கடந்த தாழ்வு மண்டலம் வலு இழந்து கேரளாவையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும். பலத்தமழை பெய்ய வாய்ப்பு இல்லை. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யலாம்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் 22 செ.மீ. மழை
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
மயிலாடுதுறை 22 செ.மீ., திருச்சி விமான நிலையம் 14 செ.மீ., சாத்தனூர் அணை, வந்தவாசி, செம்பரம்பாக்கம் தலா 13 செ.மீ., சென்னை விமானநிலையம், திருவள்ளூர், மதுராந்தகம், முசிறி, செஞ்சி, கரூர் தலா 11 செ.மீ., திண்டிவனம், மேல் அணைக்கட்டு, புதுச்சேரி, திருத்தணி, புள்ளம்பாடி, மைலம், தருமபுரி, திருவாலங்காடு, தோகைமலை, லால்குடி, பெனுகொண்டாபுரம் தலா 9 செ.மீ.,
பஞ்சம்பட்டி, செட்டிக்குளம், வெம்பாவூர், துறையூர், துவாக்குடி, வானூர், கொள்ளிடம், சென்னை, தொழுதூர், சமயபுரம், பரூர், திருவண்ணாமலை தலா 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், செங்கம், மாயனூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், பாடலூர், திருக்கோவிலூர், குன்னூர், பள்ளிப்பட்டு, உளுந்தூர்பேட்டை, ஆலங்காயம், பாலக்கோடு, சீர்காழி, சிதம்பரம், உத்திரமேரூர், தரங்கம்பாடி, திருவிடைமருதூர் தலா 7 செ.மீ. மழை பெய்து உள்ளது.

0 comments:

Post a Comment

 
Top