Cine


சென்னை தங்க சாலையில் உள்ள 103 ஆண்டுகால பழமையான அரசு அச்சகம் வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் அச்சகத்தில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
சென்னை தங்கசாலையில் அரசு மைய அச்சகம் செயல்பட்டு வருகிறது.
103 ஆண்டுகள் பழைமையான இந்த அச்சகம் 5.5 ஏக்கர் பரப்பளவில், கடந்த 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்ட தொடருக்கான அறிக்கை, போலீஸ் நிலையங்களில் பயன்படுத்தப்படும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இங்குதான் அச்சடிக்கப்படுகின்றன.
இதே அச்சகத்தில் கடந்த ஜூன் மாததத்தில்தான் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இங்கு மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
அதிகாலை 2 மணியளவில், அச்சகத்தில் பைண்டிங் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவி பல அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ராயபுரம், வேப்பேரி, எஸ்பிளனேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து 9 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னரும், அப்பகுதியில் புகை மூட்டத்துடன் அனல் வீசியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையின் அளவை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான நவீன இயந்திரம் தீயில் இருந்து தப்பியது. உடைந்து விழுந்த கட்டடத்தின் வழியே ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சென்று அங்குள்ள பொருள்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தீவிபத்து பற்றி அறிந்ததும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு சேத விவரங்களை கேட்டறிந்தார்.
3 ஆயிரம் பேர் வேலை: தீ விபத்து நிகழ்ந்த அரசு அச்சகத்தில் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். அரசு அச்சகத்துக்கு ஜப்பானில் இருந்து ரூ.6 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான மின் இணைப்பு வேலைகள் அச்சகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது ஏற்பட்ட மின் கசிவே தீவிபத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மின் தடை: தீவிபத்து காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.

அரசு அச்சகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை

ஆசியாவிலேயே மிகப்பெரிய அச்சகங்களில், சென்னை தங்கசாலையில் உள்ள அரசு அச்சகமும் ஒன்றாகும். இந்த அச்சகத்தில் இருந்தே தமிழக அரசின் அனைத்து புத்தகங்கள் மற்றும் அரசு உத்தரவுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இந்த அச்சகம் 2 பெரிய கட்டடங்களை உள்ளடக்கியது. ஒரு கட்டடம் 1831-ஆம் ஆண்டிலும், மற்றொரு கட்டடம் 1910-ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிபத்து நடந்த கட்டடம், 1910-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இந்தக் கட்டடத்தில் புத்தகங்களை கட்டும் பணியும், எந்திரங்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2 கட்டடங்களுக்கும் செல்வதற்கு குறுக்காக மிகப்பெரிய வழி விடப்பட்டிருந்தது. இதன் மூலம் தீ பரவ வாய்ப்பிருந்தும் விபத்து நடந்த சமயத்தில் பெரிய கட்டடத்துக்கு (1831-ல் கட்டப்பட்டது) தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசு அச்சகம் செயல்படத் தொடங்கியது: நூறு ஆண்டுகளுக்கும் மேலான இந்த 2 கட்டடங்களிலும் தமிழக அரசின் அச்சகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக, கோட்டைக் கட்டடத்திலும், சென்னை அண்ணாசாலையிலும் அரசு அச்சகங்கள் செயல்பட்டு வந்தன. பின்னர், தங்கசாலையில் உள்ள பழமையான கட்டடத்துக்கு அரசு அச்சகம் இடம் மாறியது. இப்போது வரை அந்தக் கட்டடத்திலேயே செயல்பட்டு வருகிறது. பழமையான கட்டடம் என்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி: சென்னை அரசு அச்சக கட்டடங்களின் பராமரிப்புக்கென ஏற்கெனவே ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேதம் அடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்களை கட்டுவதற்கான மதிப்பீடுகளைத் தயாரிக்க பொதுப்பணித் துறைக்கு செய்தித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை தங்க சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ.

0 comments:

Post a Comment

 
Top